வறுமை காரணமாக 3 ஆண்டுகள் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி..!

வறுமை நிலையில் உள்ள மூதாட்டி ஒருவர், வசிக்க வீடு இல்லாத காரணத்தால் அரசு கட்டி கொடுத்துள்ள கழிவறையில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் சோக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திரவுபதி பகேரா (72). பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால், மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார்.

மிகவும் வறுமை நிலையில் உள்ள இந்த மூதாட்டி வசிக்க வீடு கிடையாது. இதனால், கிராம நிர்வாகம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள கழிவறையை வசிப்பிடமாக மாற்றி, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். சமையல் செய்வது, தூங்குவது எல்லாம் இந்த சிறிய அறையில்தான். இரவு நேரத்தில், மகளும் பேரனும் வெளியே படுத்துக் கொள்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், “அந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு எனக்கு நேரடியாக அதிகாரம் கிடையாது; ஆனாலும், ஏதாவது திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவருக்கு வழங்குவோம்’ என்றார்.

அரசு, தனக்கு வீடு கட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் மூதாட்டி திரவுபதி.