வடக்கு – கிழக்கில் மழை வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு கிழக்கில் கடந்த சில நாள்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

கிளிநொச்சி – இரணைமடுக் குளம் நிரம்பும் நிலையில் அதன் 14 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் முத்தையன் கட்டுக்குளம் உள்ளிட்ட பல குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தினாலும், குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுளள்ளதாலும், இரண்டு மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 225 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று நண்பகல் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஆயிரத்து 877 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 90 பேர் இடம்பெயர்ந்து 25 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் 9 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 19 ஆயிரத்து 831 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

அவர்களில் 2ஆயிரத்து 611 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 478 பேர் இடம்பெயர்ந்து 56 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 22 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்798 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 507 பேர் 17 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால், 15 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 434 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 144 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 27 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 826 குடும்பங்கபளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் வெள்ளப்பாதிப்பு அதிகரித்து வருகிறது.