யாழில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு! பின்னணியில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண்ணை, சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரது குருதி மாதிரிகளும் இன்று எடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் சந்தேகநபர்கள் இருவரையும் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் கோப்பாய் பொலிஸார் இன்று (டிசெ.11) புதன்கிழமை முற்படுத்தினர். அதன்போது சந்தேகநபர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டன.

இருபாலையில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் இருவர் மீதே கோண்டாவிலில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் கொலைக் குற்றச்சாட்டையும் கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.

அதுதொடர்பில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேகநபர்களின் குருதி மாதிரியையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த மாதம் 25ஆம் திகதி விண்ணப்பம் செய்திருந்தனர்.

எனினும் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தப்பட்ட பின்னர்தான் அவர்களை சட்ட மருத்துசவ அதிகாரியின் முன் முற்படுத்த முடியும் என்பதால் இரண்டு வாரங்கள் இந்தப் பணி தள்ளிப்போடப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று நீதிமன்றில் வைத்து பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட்ட சாட்சிகள் இருவரும் அடையாளம் காட்டினர்.

அதனால் வயோதிபப் பெண்ணின் கொலைக் குற்றச்சாட்டு வழக்கில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டு அவர்களது குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி (இவரது மற்றொரு முகவரி கிளாலி வீதி எழுதுமட்டுவாழ்) இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவரின் குருதி மாதிரிகளே இவ்வாறு பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளன.

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61) என்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் மீட்டனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கொடூர குணமுடையவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்றும் வயோதிபப் பெண்ணை இழுத்து வந்து உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

வயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.