உலகத்தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்திய வவுனியா மாணவியின் கண்டுபிடிப்பு

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கல்வி 12ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியின் கண்டுபிடிப்பு இன்று மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இன்று அனைவரும் திரும்பிப்பார்க்கும் வகையில் மருத்துவத்துறைக்குத் தேவையான மிக சிறந்த கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

Auto Needle Injestor என்ற இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனையாளரான மாணவி ரோகிதா புஸ்பதேவனை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 07.12.2019 மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் கந்தப்பிள்ளை திலீபன் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், வைத்திய கலாநிதி கோணேஸ்வரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலன்புரிச்சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். எஸ். வாசன் உட்பட மாணவியின் ஆசிரியை மற்றும் தாயார் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பாடசாலை சமூகத்தினர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , நகரசபை உறுப்பினர் , சட்டத்தரணி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தின் மூலம் மாணவி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கையினை பரிசோதனை மேற்கொண்டார்.

 

அதன் பின்னர் கலந்து கொண்டவர்களின் விசேட உரைகள் இடம்பெற்றிருந்ததுடன் மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த மாணவி குறித்த கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

 

குறித்த மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடமிருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDEL INJECTOR) கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையுடன் அவரின் வெற்றிக்கு பாடசாலை சமூகம் மாத்திரமே முழுமையான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.