கொலை குற்றவாளியை திருமணம் செய்ய தயாரான பெண் பொலிஸ்… சுவாரஸ்ய பின்னணி!

ஒரு பயங்கரமான கொலை வழக்கில் தப்பிய குற்றவாளியை, திருமணம் செய்வதாக கூறி பெண் பொலிஸ் ஒருவர் சாமர்த்தியமாக கைது செய்துள்ளார்.

பால்கிஷன் சோபே (28) என்கிற குற்றவாளி மத்திய பிரதேச – உத்திரபிரதேச எல்லைகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக குண்டர் சட்டம் பாய்ந்து 15க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டறிந்து, பொலிஸார் கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர் தோல்வியையே சந்தித்துள்ளன.

இதனால் பால்கிஷன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 10000 சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதற்கிடையில் பால்கிஷனுக்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பெண் ஆய்வாளர் மாத்வி அக்னிஹோத்ரி, புது செல்போன் எண்ணில் பால்கிஷனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

மூன்றே நாட்களில் மாத்வியின் குரலில் மயங்கிய பால்கிஷன் திருமணம் செய்துகொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோவிலில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால்கிஷன் எப்போதும் கையில் துப்பாக்கியுடன் இருப்பான் என்பதால், மாத்வியும் தன்னுடைய கைப்பையில் ஒரு துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாத்விவை சந்திப்பதற்காக பால்கிஷன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்துள்ளான். அப்போது அங்கு மறைந்திருந்த பொலிஸார், சட்டென்று அவனை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.